உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது: நடிகை நமீதா
தமிழில், ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நமீதா. 2004-ல் இந்த படம் வந்தது. அதன்பிறகு ‘ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா, பாண்டி’ உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக ‘இளைஞன்’ படத்தில் நடித்தார். இந்த படம் 2010-ல் வெளிவந்தது. அதன்பிறகு நமீதா உடல் எடை திடீரென கூடியது.
இதனால் புதிய தமிழ் படவாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. ஓரிரு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்தார். உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தார். இதன்மூலம் 90 கிலோ எடையில் இருந்த அவர், 20 கிலோ குறைந்து 70 கிலோவாக மாறினார். தற்போது மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார். இதைத்தொடர்ந்து புதிய படவாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. மோகன்லாலுடன் ‘புலிமுருகன்’ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து நமீதா கூறியதாவது:-
எனக்கு உடல் எடைபோட்டதால் படவாய்ப்புகள் இல்லாமல் போனது. நண்பர்களாக இருந்தவர்கள் கூட உதவவில்லை. ஒதுங்கிப்போனார்கள். இப்போது உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது. மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தமிழில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறேன். குத்து சண்டை கற்று இருக்கிறேன். எனவே, அதிரடி பட கதாபாத்திரங்களுக்கு நான் பொருத்தமாக இருப்பேன்.

Post a Comment